Introduction

மக்கள் சேவையில் நூறு ஆண்டுகள்

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அனைத்து விதக் கூட்டுறவு சங்கங்கள், கிராமப்புற விவசாயிகள், நெசவாளர்கள், கிராம கைவினைஞர்கள் மற்றும் நகர்வாழ் மக்கள் அனைவரின் கடன் தேவைகளை அறிந்து அவற்றைப் பூர்த்தி செய்து வருவது கூட்டுறவு வங்கிகளாகும். இவை கடன் கூட்டுறவுகள் என்று அழைக்கப்படுகின்றன. நீண்ட கால கடன் அமைப்பு என்றும், குறுகிய கால கடன் அமைப்பு என்றும் இரு பிரிவுகளாக இவை செயலாற்றி வருகின்றன. தமிழ்நாட்டில் குறுகிய கால கடன் அமைப்பு மூன்றடுக்கு முறையில் உள்ளது. கிராம் அளவில் 4589 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளும், மாவட்ட அளவில் 23 மத்தியக் கூட்டுறவு வங்கிகளும், மாநில அளவில் தலைமைக் கூட்டுறவு வங்கியும் தங்கள் பணியினை செவ்வனே ஆற்றி வருகின்றன. தலைமை வங்கியான தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி, நவம்பர் 1905ல் ஒரு நகர வங்கியாக தொடங்கப்பட்டு பின் ஜுலை 1920ல் அனைத்து மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளின் தேவைகளுக்காக மாநில வங்கியாக மாற்றப்பட்டது. சென்னை மாநகரில் 40 கிளைகள், ஒரு விரிவாக்கக் கிளை மற்றும் தலைமையகத்துடனும் இயங்கி வரும் இவ்வங்கி, மத்திய / தொடக்க வேளாண்மை வங்கிகளின் உற்ற தோழனாக ஆலோசனைகள் வழங்கி, தமிழ்நாட்டில் கூட்டுறவு இயக்கத்திற்கு உறுதுணையாக விளங்கி வருகின்றது. தலைமைக் கூட்டுறவு வங்கியான இந்த நிறுவனம், தமிழ்நாட்டில் கூட்டுறவு இயக்கம் தோன்றிய அதே ஆண்டில் துவக்கப்பட்ட வங்கியாகும். அவ்வகையில், இந்த வங்கி ஒரு நூற்றாண்டு காலம் தமிழ்நாட்டு மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக வங்கியியல் பணி ஆற்றி வருகிறது. இந்திய அளவில் கூட்டுறவு இயக்கம் துவங்கிய மறு ஆண்டிலேயே இந்த வங்கியானது செயல்படத் துவங்கியது. அகில இந்திய அளவில் முதன் முதலாவதாக நூற்றாண்டு விழாவைக் காண இருக்கும் தலைமைக் கூட்டுறவு வங்கி எனும் சிறப்பிற்கும் உரிய வங்கியாகும். இந்த வங்கியானது இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து உரிமம் பெற்று செயல்பட்டு வரும் வங்கியாகும். இந்திய ரிசர்வ் வங்கி சட்டத்தின் இரண்டாம் அட்டவணையில் இடம் பெற்றுள்ள வங்கியாகும். டி.ஐ.சி.ஜி.சி. நிறுவனத்தில் உறுப்பினராக இருக்கும் இவ் வங்கி, டி.ஐ.சி.ஜி.சி. சட்டப்படிக் காப்புறுதி செய்யப்பட்ட வங்கியாகும். தமிழ்நாடு அரசு பங்குதாரராக உள்ள சிறப்புடைய வங்கியாகும். இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படியும், நபார்டு வங்கியால், குறிப்பிட்ட கால இடைவெளியில் கண்காணிப்பு மற்றும் ஆய்வு மேற்கொள்ளப்படும் வங்கியாகும். தேசிய அளவிலான நிறுவனங்களான, நபார்டு மற்றும் நாப்ஸ்காப் நிறுவனங்களின் விருதுகளை சிறந்த செயல்பாட்டிற்காக தொடர்ந்து பெற்று வரும் வங்கியாகவும் செயல்பட்டு வருகிறது. வங்கியின் கிளைகளில் வைப்பீடுகள் மற்றும் தனி நபர் கடன்கள் தொடர்பான பணிகள் கணினி மூலம் இயக்கப்படுகின்றன. தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கியின் எழுச்சிமிகு வளர்ச்சிக்கும், சிறப்பிற்கும் தமிழ்நாட்டின் சிறந்த கூட்டுறவாளர்கள் பலரும் பங்காற்றியுள்ளனர். தற்பொழுது தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறையின் உயர் அதிகாரியான கூடுதல் பதிவாளர் திரு. போ.சி, திருஞானம் அவர்கள் தனி அலுவலராகப் பொறுப்பு வகித்து வருகிறார். இவ்வங்கியின் நிதிநிலை ஆதாரங்கள் அனைவரும் பாராட்டத்தக்க வகையில் வளர்ச்சிப் பாதையில் முன்னேறி வருகிறது. அதன் விவரங்கள் பின்வருமாறு:

மூலதனம்

31.12.2004 அன்று அங்கீகரிக்கப்பட்ட மூலதனமாக ரூ.75,00 கோடியும், செலுத்தப்பட்ட மூலதனமாக ரூ. 40.95 கோடியும் உள்ளது. இதில் தமிழ்நாடு அரசு ரூ.0.26 கோடியும், 23 மத்திய வங்கிகள் ரூ. 40.69 கோடியும் செலுத்தியது.

ஒதுக்கீடுகள்

31.12.2005 அன்று வங்கியின் மொத்த ஒதுக்கீடுகள் ரூ.439.14 கோடியாகும். 30.6.1980இல் ரூ.17.58 கோடியாகவும், 30.6.1990இல் ரூ.49.90 கோடியாகவும், 31.3.1995 இல் ரூ. 102.26 கோடியாகவும் இருந்த மொத்த ஒதுக்கீடுகள் தற்போது ரூ. 439.14 கோடியாக உயர்ந்துள்ளது.

வைப்பு நிதிகள்

வைப்பு நிதி சேகரிப்பில் வங்கியின் வளர்ச்சி ஒரு சாதனையாக மாறியுள்ளது. 30.6.1980ல் ரூ.130.30 கோடியாக இருந்த வைப்பு நிதிகள், 30.6.1990இல் ரூ.387.24 கோடியாக உயர்ந்தது. 31.3.1995இல் ரூ.760.29 கோடியாக இருந்த வைப்பு நிதிகள், 31.3.2005இல் ரூ.3062.58 கோடியாக உயர்ந்துள்ளது. 31.12.2004இல் மொத்த வைப்பீடுகள் ரூ.2879.44 கோடியாக உள்ளது. வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் வைப்பு நிதி / சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வசதி, வங்கியின் 7 கிளைகளில் அளிக்கப்பட்டு வருகிறது.

பெறப்பட்ட கடன்கள்

மத்தியக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் வழங்கப்படும் விவசாயக் கடன்கள் (குறுகிய காலம் மற்றும் மத்திய காலக் கடன்கள்), நெசவாளர் கடன்கள் போன்றவற்றிற்கு தேசிய விவசாய மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியிடமிருந்து (நபார்டு) மறுநிதியுதவி பெறப்பட்டு வருகிறது. சிறுதொழில் கடன்களுக்கு சிறுதொழில் வளர்ச்சி வங்கி (சிட்பி), தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகம் (என்.சி.டி.சி) மற்றும் தேசிய உடல் ஊனமுற்றோர் நிதி வளர்ச்சிக் கழகம் (என்.எச்.எஃப்.டி.சி.) ஆகியவற்றிடமிருந்து மறுநிதியுதவி பெற்று அவற்றை மத்தியக் கூட்டுறவு வங்கிகளின் மூலம் கடன்களாக வழங்கி வருகின்றது. இவ்வகையில், 31.12.2004இல் வங்கியின் பெறப்பட்ட கடன்கள் ரூ.919.99 கோடியாக உள்ளது.

வங்கியின் முதலீடுகள்

வங்கிகளும், இதர வாடிக்கையாளர்களும் இட்டு வைத்துள்ள வைப்பு நிதிகளின் பாதுகாப்பு வேண்டி இந்திய ரிசர்வ் வங்கியின் வழிமுறைகளின்படி சட்டபூர்வமான முதலீட்டுத் தேவைகளை தலைமை வங்கி தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. மத்திய, மாநில அரசுகள் வெளியிடும் கடன் பத்திரம் போன்ற பாதுகாப்பு மிக்க, அதே நேரத்தில் தகுந்த வருவாய் ஈட்டக் கூடிய பத்திரங்களில் வங்கி தனது முதலீடுகளை செய்துள்ளது. 31.12.2004இல் வங்கியின் முதலீடுகள் ரூ.1271.36 கோடியாகும்.

வழங்கப்பட்ட கடன்கள்

மத்தியக் கூட்டுறவு வங்கிகள் மூலமாக தொடக்க வேளாண்மை வங்கிகளுக்கு குறுகிய கால மற்றும் மத்திய கால விவசாயக் கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆண்டுக்கு ரூ.1000 கோடி அளவில் இக்கடன்கள் விவசாயிகளின் தேவைக்கேற்ப வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், கறவை மாடு, ஆடு வளர்ப்பு, பட்டு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, வண்டி மாடு போன்ற விவசாயம் சார்ந்த செயல்களுக்கு மத்திய காலக் கடன்கள், குறைந்த வட்டியில் வழங்கப்பட்டு வருகின்றது. மத்தியக் கூட்டுறவு வங்கிகளுக்கு, அவைகளால் நேரடியாகவும், நகரக் கூட்டுறவு வங்கிகள் மூலமாகவுச்ம் வழங்கும் சிறுதொழில்கள் மற்றும் கனரக வாகனங்கள் கடன்களுக்கும் தேவையான மத்திய காலக் கடன்களை வழங்கி வருகின்றது. மாநிலத்தில் இயங்கி வரும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், கூட்டுறவு நூற்பு ஆலைகள், மாவட்ட கூட்டுறவு மொத்த விற்பனைச் சங்கங்கள் மற்றும் இதர கூட்டுறவு நிறுவனங்களின் காசுக்கடன் தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன. கிராம மற்றும் நகர்ப்புறங்களில் நகைக் கடன் வழங்குவது ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்து வருகிறது. மத்தியக் கூட்டுறவு வங்கிகள் நேரடியாகவும், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகள் மூலமாகவும், இக்கடன்கள் வழங்க தேவையான மறுநிதி, தலைமை வங்கியால் வழங்கப்பட்டு வருகின்றது. சென்னையில் இயங்கி வரும் இதர தலைமைக் கூட்டுறவு நிறுவனங்கள் தலைமை வங்கியிடம் நேரடியாக நிதியுதவி பெற்று வருகின்றன. தேசிய உடல் ஊனமுற்றோர் நிதி வளர்ச்சிக் கழகத்திடமிருந்து பெறப்பட்ட மறுநிதியுதவி வசதியைப் பயன்படுத்தி மத்தியக் கூட்டுறவு வங்கிகள் மூலம் உடல் ஊனமுற்றோரின் பொருளாதார முன்னேற்றத்திற்கு கடன் வசதிகள் வழங்கப்படுகின்றன. சென்னை நகரில் இயங்கும் வங்கியின் கிளைகள் மற்றும் தலைமையகம் மூலமாக பல்வேறு நேரடி தனி நபர் கடன் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, நடுத்தர மக்களுக்கு பயன்படும் வகையில் நகைக் கடன் குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்பட்டு வருகிறது. கணினிக் கடன், கல்விக் கடன், வீட்டு அடமானக் கடன், வீட்டு வசதிக் கடன், மழைநீர் சேகரிப்புத் திட்டக் கடன், இல்லத் தேவைக் கடன், காப்புறுதி ஆவணங்கள் மற்றும் தேசிய சேமிப்புப் பத்திரங்களின் பிணையத்தின் பேரில் கடன் போன்ற பல்வேறு கடன் வசதிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. 31.3.2004இல் வங்கி வழங்கிய கடன்களின் அளவு ரூ. 2823.31 கோடியாகும்.

நடைமுறை மூலதனம்

வங்கியின் நடைமுறை மூலதனம் 30.6.1980இல் ரூ.194.51 கோடியாக இருந்து, 30.6.1990இல் ரூ.789.33 கோடியாகவும், 31.3.1995இல் ரூ.1726.33 கோடியாகவும், 31.3.2004இல் ரூ.4504,87 கோடியாகவும் உயர்ந்து வங்கியின் வளர்ச்சிக்கு அளவு கோலாக விளங்கி வருகிறது. 31.12.2005இல் இது ரூ. 4788.75 கோடியாக இருந்தது.

தன்னைச் சார்ந்த வங்கிகள் வளர்ச்சித் திட்டங்கள்

தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கியானது குறுகிய கால கடன் கட்டமைப்பின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகளுக்கும் தலைமை வங்கியாக செயல்பட்டு வருகிறது. மாவட்ட அளவில் மத்தியக் கூட்டுறவு வங்கிகள் அவற்றின் கிளைகளோடு செயல்பட்டு வருகின்றன. கிராமப்புற அளவில் பிரதம வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகள், மத்தியக் கூட்டுறவு வங்கிகளின் அங்கங்களாக செயல்பட்டு வருகின்றன. தலைமைக் கூட்டுறவு வங்கியுடன் மத்தியக் கூட்டுறவு வங்கிகள் இணைப்பு நிறுவனங்களாக செயல்பட்டு வருகின்றன. எனவே, தலைமை வங்கியின் இணைப்பு நிறுவனங்களான மத்தியக் கூட்டுறவு வங்கிகளின் மேம்பாட்டிற்காக உரிய உதவிகளை தலைமைக் கூட்டுறவு வங்கி செய்து வருகிறது. தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி மற்ற எந்த மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கியும் செய்யாத அளவில் தன்னுடன் இணைந்த மத்தியக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளின் வளர்ச்சிக்குப் பல திட்டங்களைத் தீட்டி பெரும் பொருட்செலவில் தொடர்ந்து உதவி செய்து வருகின்றது. அதன் விவரங்கள் பின்வருமாறு:
  • தொடக்க வேளாண்மை வங்கிகள் பெறும் இட்டு வைப்பிற்காக ஒரு காப்பீட்டுத் திட்டம் செயல்பட்டு வருகிறது. இதற்குத் தேவையான பிரிமியம் தலைமை வங்கி, மத்திய வங்கிகள் மற்றும் தொடக்க வங்கிகளால் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றது. 30.6.2004 வரையில் இந்த நிதிக்கு தலைமை வங்கிரூ.186.49 இலட்சம் வழங்கியுள்ளது.
  • மத்தியக் கூட்டுறவு வங்கிகள் தங்களது கடன் வசூல் முயற்சிக்கு உதவியாக வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
  • கூட்டுறவு வங்கிகள் நவீன தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்திக் கொண்டு, வணிக வங்கிகளுக்கு இணையான சேவையை வழங்க வேண்டுமென்ற நோக்கத்தோடு, தலைமை வங்கியின் இணைப்பு நிறுவனங்களான மத்தியக் கூட்டுறவு வங்கிகளுக்கு கணிப்பொறி, குளிர்சாதனப் பெட்டி, நகல் எடுக்கும் இயந்திரம், தொலைநகல் இயந்திரம் மின்னாக்கிகள், போன்ற உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இத்திட்டங்கள் ஒவ்வோர் ஆண்டும் தொடர்ந்து செயலாக்கப்பட்டு, மத்திய வங்கிகள் பெரும் பயனடைந்து வருகின்றன.

தொடக்கக் கூட்டுறவுகள் வளர்ச்சி நிதி

தலைமை வங்கி தனது சொந்த நிதியிலிருந்து மத்திய / தொடக்க வங்கிகளுக்கு நேரடியாக பல உதவிகள் செய்து வருவதுடன் தொடக்கக் கூட்டுறவுகள் வளர்ச்சி நிதி ஒன்றை நிறுவி, தனது நிகர இலாபத்திலிருந்து ஒவ்வோர் ஆண்டும் 5 விழுக்காடு அளவில் அந்த நிதிக்கு வழங்கி வருகின்றது. இந்த நிதியிலிருந்து தொடக்க வேளாண்மை வங்கிகளின் உட்கட்டமைப்புத் தேவைகளான புதிய வங்கி கட்டடங்கள் கட்டுதல், நகைப்பெட்டி வைக்க பாதுகாப்பு அறை கட்டுவது, பாதுகாப்பு அறைக்கு வலிமையான கதவுகள் பொருத்துவது, நகைப் பாதுகாப்பு பெட்டகங்கள், வங்கியியல் நவீன முகப்பிடங்கள் மற்றும் நகைப் பாதுகாப்பு பெட்டகங்கள், கணினிகள், அலமாரிகள் வாங்குதல் போன்றவற்றிற்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகின்றது. கூட்டுறவுகளுக்கிடையே கூட்டுறவு மற்றும் கூட்டுறவுக் கல்வி ஆகியவை கூட்டுறவு இயக்கத்தின் இரு முக்கிய கொள்கைகளாகும். இக் கொள்கைக்கு இணங்க, தமிழ்நாட்டிலுள்ள கூட்டுறவு நிறுவனங்கள் ஒவ்வொன்றும் அதன் இலாபத்தில் 3 விழுக்காட்டை கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதிக்கும், 2 விழுக்காட்டை கூட்டுறவு கல்வி நிதிக்கும் செலுத்தி வருகின்றன. இந்நிதியானது தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் பராமரிக்கப்பட்டு, தமிழ்நாட்டிலுள்ள கூட்டுறவு ஆராய்ச்சிக்காகவும், மற்றும் கூட்டுறவு நிறுவனங்களின் வளர்ச்சிக்காகவும், கூட்டுறவு கல்வி வளர்ச்சியை அதிகரிப்பதற்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நிதிகளுக்காக தலைமை வங்கி ஒவ்வோர் ஆண்டும் தனது நிகர இலாபத்தில் 5 விழுக்காடு தொகையை வழங்கி வருகிறது.

மத்திய / தொடக்க வங்கிகளுக்கு விருதுகள்

மத்தியக் கூட்டுறவு வங்கிகளின் செயல்திறன் அடிப்படையில் ஒவ்வோர் ஆண்டும் மூன்று மத்திய வங்கிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. விருது பெறும் வங்கிகளின் பணியாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கான செலவை தலைமை வங்கி ஏற்றுக் கொள்கிறது. வளர்ச்சி செயல் திட்டம் என்ற தேசிய வங்கியின் திட்டத்தின் கீழ், 1994-95ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு மத்தியக் கூட்டுறவு வங்கியின் எல்லைக்குட்பட்ட தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளில் சிறப்பாக இயங்கி வரும் ஒரு வங்கிக்கு தலைமை வங்கி கேடயம் வழங்கி வருகிறது.

கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்குப் பயிற்சி

தலைமை வங்கி, சென்னை மாதவரத்தில், விவசாயக் கூட்டுறவுப் பணியாளர் பயிற்சி நிலையம் நிறுவி அதன் மூலம், தலைமை வங்கி, மத்தியக் கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் நகரக் கூட்டுறவு வங்கிகளின் அதிகாரிகள் மற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் பயிற்சி அளித்து வருகின்றது. 1989 நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட இப்பயிற்சி நிலையம் 30.6.2004 வரை 24,240 ஊழியர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளது.

வங்கியின் இலாபம்

தனது சீரிய செயலாக்கத்தின் மூலம் ஒவ்வோர் ஆண்டும் தொடர்ந்து இலாபம் ஈட்டி வரும் தலைமை வங்கி தனது இலாபத்தை அனைவருக்கும் பயன்படும் வகையில் பகிர்ந்தளித்து வருகின்றது. 2004-2005இல் வங்கி ஈட்டிய நிகர இலாபம் ரூ. 25.38 கோடியாகும். இது கடந்த ஆண்டைவிட 23.24 விழுக்காடு அதிகமாகும்.

வங்கி பெற்ற விருதுகள்

மாநிலக் கூட்டுறவு வங்கிகளின் தேசிய இணையம், மும்பை, மற்றும் தேசிய விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, மும்பை, வழங்கி வரும் விருதுகளை தனது சிறப்பான செயல்திறனால் ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து பெற்று வருகிறது. அதன் விவரங்கள் பின்வருமாறு: மாநிலக் கூட்டுறவு வங்கிகளின் தேசிய இணையம், மும்பை, வழங்கிய விருதுகள்.
ஆண்டு பொருள் பரிசு
1985-86 சிறந்த செயல்பாடு மூன்றாவது
1986-87 சிறந்த செயல்பாடு இரண்டாவது
1987-88 சிறந்த செயல்பாடு மூன்றாவது
1988-89 சிறந்த செயல்பாடு இரண்டாவது
1989-90 சமூக நோக்க வளர்ச்சி சிறப்பு
1990-91 சிறந்த செயல்பாடு இரண்டாவது
1991-92 சிறந்த செயல்பாடு முதலாவது
1992-93 சமூக நோக்க வளர்ச்சி சிறப்பு
1993-94 செயல்திறன் சிறப்பு
1994-95 சிறந்த செயல்பாடு முதலாவது
1995-96 சிறந்த செயல்பாடு முதலாவது
1996-97 சிறந்த செயல்பாடு முதலாவது
1996-97 அகில இந்திய பரஸ்பர ஏற்பாட்டு திட்ட செயல்பாடு முதலாவது
1997-98 அகில இந்திய பரஸ்பர ஏற்பாட்டு திட்ட செயல்பாடு முதலாவது
1999-2000 அகில இந்திய பரஸ்பர ஏற்பாட்டு திட்ட செயல்பாடு முதலாவது
2000-2001 சிறந்த செயல்பாடு முதலாவது
2001-2002 சிறந்த செயல்பாடு இரண்டாவது
2001-2002 அகில இந்திய பரஸ்பர ஏற்பாட்டு திட்ட செயல்பாடு சிறப்பு
தேசிய விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி 1995-96ஆம் ஆண்டு முதல் சிறப்பாக செயல்படும் மாநிலக் கூட்டுறவு வங்கிகளுக்கு விருதுகள் வழங்கி வருகிறது.
ஆண்டு பொருள் பரிசு
1995-96 சிறந்த செயல்பாடு இரண்டாவது
1998-99 சிறந்த செயல்பாடு இரண்டாவது
2000-2001 சிறந்த செயல்பாடு முதலாவது
சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கும் திட்டத்தை மத்தியக் கூட்டுறவு வங்கிகள் மூலம் சிறப்பாக ஒருங்கிணைத்து செயலாக்கியதற்காக தலைமை வங்கிக்கு நபார்டு வங்கி சிறப்பு பரிசினை வழங்கியது.